வெள்ளி, 30 மே, 2014


சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 115–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் விஜயராமகிருஷ்ணா, அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே
அனைத்து வார்டுகளிலும் கூடுதலாக அம்மா உணவகங்கள் திறக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.


இதற்கு மேயர் சைதை துரைசாமி பதில் அளித்து பேசியபோது,
’’சென்னை மாநகரில் உள்ள ஏழை, எளிய மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்வோர், முதியோர்கள் மலிவான விலையில் தரமான உணவினை வயிறார சாப்பிடும் வகையில் 1000 அம்மா உணவகம் திறக்க முடிவெடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 200 வார்டுகளில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகம், ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றில் அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
203 அம்மா உணவகங்களில் மாலை வேளையில் சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் விற்பனையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது தவிர கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை, கஸ்தூரிபா அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான உள்கட்டமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் விரைவில் அவை திறக்கப்படும்.
மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் தலா 1 வீதம் கூடுதலாக 200 அம்மா உணவகங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடங்கள் தேர்வு செய்யப்பட்டதும் தேவைப்படும் இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்படும்’’என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக