வெள்ளி, 18 ஏப்ரல், 2014

1989 தேர்தல் ஒரு பார்வை

‘கை’க்கு எதிராக ‘எதிர்க்கட்சிகளின் கை’ மீண்டும் ஓங்கிய 1989 தேர்தல்

பாரதீய ஜனதா ஆதரவுடன் ‘தேசிய முன்னணி’ ஆட்சி அமைத்தது
நமது பாராளுமன்றத்துக்கு 1951 முதல் 1971 வரை நடந்த 5 தேர்தல்களிலும் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 6–வது தேர்தலில் (1977) முதல் முறையாக காங்கிரஸ் தோல்வியைத்தழுவியது. அடுத்த இரு தேர்தல்களிலும் (1980, 84) சுதாரித்துக்கொண்டு மீண்டும் ஆட்சி பீடம் ஏறியது. ஆனால் 1989 தேர்தலில் காங்கிரசுக்கு மீண்டும் சறுக்கல் ஏற்பட்டது.
இந்தியாவின் 9–வது பொதுத்தேர்தலான அது, 1989–ம் ஆண்டு நவம்பர் மாதம் 22–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடந்தது. 24 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 529 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்த வாக்காளர்கள் 49 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 129 பேர். ஆண்கள் 26 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரத்து 142 பேர். பெண்கள் 23 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரத்து 987 பேர்.
 30 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 61.95 ஆகும். தேசிய கட்சிகளைச் சேர்ந்த 1,378 பேர், மாநில கட்சிகளைச் சேர்ந்த 143 பேர், அங்கீகாரம் பெறாத கட்சிகளைச் சேர்ந்த 926 பேர், சுயேச்சைகள் 3 ஆயிரத்து 713 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 160 பேர் போட்டியிட்டனர். அதில் 5 ஆயிரத்து 3 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
தனிமெஜாரிட்டி இல்லை
இந்திய தேர்தல் வரலாற்றில், முதன் முதலாக இந்த தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வில்லை.
காங்கிரஸ் கட்சி 510 இடங்களில் போட்டியிட்டு, 197 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி 11 கோடியே 88 லட்சத்து 94 ஆயிரத்து 702 வாக்குகளை பெற்றது.
இரண்டாம் இடத்தை வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் பெற்றது. அந்த கட்சி 244 இடங்களில் போட்டியிட்டு 143 இடங்களில் வென்றது. அந்த கட்சி 5 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 521 வாக்குகளை பெற்றது.
மூன்றாம் இடத்தை பாரதீய ஜனதா பிடித்தது. அந்த கட்சி 225 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 33 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 12 இடங்களிலும், அ.தி.மு.க.11 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ராஜீவ் காந்தி அமேதி தொகுதியிலும், வி.பி.சிங் உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. அதே போல் பிற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.
ஆனால் ஜனதா தள தலைவர் வி.பி.சிங் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இதனால் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு, வி.பி.சிங் 1989–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2–ந் தேதி பிரதமர் ஆனார். ஆனால் ஜனதா தள கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக சந்திரசேகர், அதில் இருந்து விலகி சமாஜ்வாடி ஜனதா கட்சியை தொடங்கினார். அவருக்கு 55க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு கொடுத்தனர்.  இந்த கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்று ராஜீவ் காந்தி அறிவித்தார். அதோடு பாரதீய ஜனதாவும் ராமர் கோவில் பிரச்சினையை கிளப்பி, வி.பி. சிங்குக்கு ஆதரவை வாபஸ் பெற்றது.  இதனால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, சந்திரசேகர் 1990–ம் ஆண்டு நவம்பர் மாதம் 10–ந் தேதி பிரதமர் ஆனார்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி வீட்டில் உளவு பார்த்ததாக கூறி, காங்கிரஸ் கட்சி சந்திரசேகருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் அவரது ஆட்சியும் ஒரேஆண்டில்கவிழ்ந்தது.
தமிழகம் தந்த மாறுபட்ட முடிவு
1989 தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் மத்தியில் வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தின் தீர்ப்பு மாறுபட்டு இருந்தது.
எம்.ஜி.ஆர். மறைவையடுத்து, 1989 ஜனவரியில் சட்டமன்றத்தேர்தல் நடந்தபோது, தி.மு.கழகம் பெரும்வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க.–ஜெ. அணி, காங்கிரஸ், அ.தி.மு.க.–ஜா.அணி ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. பிளவுபட்டு இருந்த அ.தி.மு.க. ஒன்றாக இணைந்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 1989 இறுதியில் நடந்த பாராளுமன்றத்தேர்தலை சந்தித்தது. இதில் அந்தக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் நாகப்பட்டினம் தவிர, மீதி 38 இடங்களையும் அந்தக்கூட்டணி கைப்பற்றியது. அதுவரை தி.மு.க. வின் அசைக்கமுடியாத கோட்டைகளாக இருந்த வடசென்னை, மத்திய சென்னை ஆகியவை கூட ‘கை’மாறின. வடசென்னையில் காங்கிரசின் கை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியனும், மத்திய சென்னையில் காங்கிரஸ் வேட்பாளர் இரா.அன்பரசுவும் வெற்றி பெற்றனர்.
நாகப்பட்டினத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் எம்.செல்வராசு 21,523 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வீரமுரசுவை வென்றார்.
போபர்ஸ் ஊழல்
1984ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 404 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம், இந்திரா காந்தியின் மறைவு ஏற்படுத்திய அனுதாப அலை. பிரதமரான ராஜீவ் காந்தி, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். சிலவற்றில் அவருக்கு எதிரான கருத்து தான் உருவாகியது. உதாரணமாக, பணக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்த வி.பி.சிங்கின் நிதித்துறையை மாற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே போல் போபர்ஸ் ஊழல், இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கை போன்ற பிரச்சினைகளால், ராஜீவ் காந்தியால், 1989–ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பெற முடியவில்லை.
 
தேசிய முன்னணியின் வெற்றிக்கு முன்னோடி ‘அலகாபாத்  இடைத்தேர்தல்’
ராஜீவ்காந்தி 1984–ம் ஆண்டு பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்). அப்போது வி.பி.சிங் பெரும் பணக்காரர்கள் வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் ராஜீவ் காந்தி, அவரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராணுவ அமைச்சராக மாற்றினார்.அப்போது போபர்ஸ் ஊழலில் நடந்த முறைகேட்டை வி.பி.சிங் அம்பலப்படுத்தினார். இந்த ஊழலில் ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜீவ் காந்தி வி.பி.சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் மனமுடைந்த வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். ஜன்மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கிய அவர் பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் 1988–ம் ஆண்டு அக்டோபர் 11–ந் தேதி அலகாபாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார். வி.பி.சிங்கை தோற்கடிக்க ராஜீவ் காந்தி தீவிர முயற்சி எடுத்தார். ஆனால் பலன் இல்லை. வி.பி.சிங் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சாஸ்திரி தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் மொத்தம் 65க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர். ஆனால் வி.பி.சிங் வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலே 1989–ம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்கான ஒருமுன்னோட்டமாக அமைந்தது.
கேபினட் அந்தஸ்தில் தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி பதவி
1989 தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதபோதிலும், பிரதமர் வி.பி. சிங் தனது மந்திரிசபையில் தி.மு.க. வை சேர்த்துக்கொண்டார். அதாவது அப்போது ராஜ்ய சபை எம்.பி.யாக இருந்த முரசொலி மாறன் மத்திய மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக