திங்கள், 14 ஏப்ரல், 2014

சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன், விவசாயி. இவரது மகன் ஹர்ஷன் (வயது 2). கணேசனுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் அவரது தோட்டத்தில் 400 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு ஒன்றை
தோண்டினார். பின்னர் அதனை மூடாமல் அப்படியே போட்டு விட்டார்.
இந்நிலையில் இன்று காலை கணேசன் அவரது தோட்டத்திற்கு ஹர்சனை அழைத்து கொண்டு சென்றார். அங்கு சென்றதும் அவர் விவசாய பணிகளை பார்க்க சென்று விட்டார். ஹர்சன் தோட்டத்திற்குள் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் ஹர்ஷன் விழுந்து விட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு கணேசன் மற்றும் பக்கத்து தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ஹர்ஷனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மீட்க முடியவில்லை.
இதையடுத்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஹர்ஷனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆழ்குழாய் கிணற்றுக்குள் கயிற்றை இறக்கி ஆராய்ந்த போது ஹர்ஷன் 10அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனே பொக்லைன் எந்திரங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5–ந்தேதி கள்ளக்குறிச்சி வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசந்திரனின் மகள் மதுமிதா ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தாள். அந்த சோகம் தீர்வதற்குள் இன்று ஹர்ஷன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக