வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தூத்துக்குடி

தொகுதி மறு சீரமைப்பின் போது ஏற்கனவே இருந்த திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு புதிதாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.
‘முத்து நகரம்’, ‘துறைமுக நகரம்’ என்ற சிறப்பைக் கொண்ட தூத்துக்குடி, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. முத்துக்குளியல், சங்கு குளியல், உப்பு உற்பத்தி, மீன்பிடி தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நகரம் இது.
தேர்தல் என்று வந்துவிட்டா
ல், தூத்துக்குடி தொகுதி மக்களால் கவனிக்கப்படக்கூடிய தொகுதிகளில் ஒன்றாகி விடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து தற்போதைய தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
6 சட்டசபை தொகுதிகள்
தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ளன. கடந்த காலங்களில் இந்த 6 தொகுதிகளும் 3 பாராளுமன்ற தொகுதிகளில் இடம் பெற்று இருந்தன.
மாவட்ட தலைநகரமான தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட தொகுதிகள் முன்பு நெல்லை பாராளுமன்ற தொகுதியிலும், திருச்செந்தூர், சாத்தான்குளம் தொகுதிகள் திருச்செந்தூர் தொகுதியிலும், கோவில்பட்டி தொகுதி விருதுநகர் தொகுதியிலும் இணைந்து இருந்தன.
இந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 309 ஆண்கள், 6 லட்சத்து 42 ஆயிரத்து 318 பெண்கள், ஒரு திருநங்கை ஆக மொத்தம் 12 லட்சத்து 76 ஆயிரத்து 628 வாக்காளர்கள் உள்ளனர்.
பல்வேறு சமூகத்தினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். இந்துக்கள் 74 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 5 சதவீதம் பேரும் உள்ளனர்.
சாதிவாரியாக எடுத்துக் கொண்டால் நாடார் சமுதாயத்தினர் 32 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 18 சதவீதம், நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 11 சதவீதம், மீனவர்கள் 9 சதவீதம், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 சதவீதம் என்ற அளவில் உள்ளனர்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 6 சதவீதம் பேரும், பிள்ளைமார் வகுப்பினர் 6 சதவீதம் பேரும், கோனார் சமூகத்தினர் 3 சதவீதம் பேரும், பிராமணர் வகுப்பினர் 2 சதவீதம் பேரும், இதர வகுப்பினர் 7 சதவீதம் பேரும் உள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள்
திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்த போது 1998–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடிகர் ராமராஜன் (அ.தி.மு.க.), 1999–ம் ஆண்டு ஏ.டி.கே.ஜெயசீலன் (தி.மு.க.), 2004–ம் ஆண்டு ராதிகா செல்வி (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடந்த 2009–ம் ஆண்டு பொதுத்தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜெயதுரை வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:–
மொத்த ஓட்டுகள் :– 9,39,711
பதிவானவை:– 6,55,882
எஸ்.ஆர்.ஜெயதுரை (தி.மு.க.):–
3,11,017
சிந்தியாபாண்டியன்(அ.தி.மு.க.):–
2,34,368
எஸ்.எம்.சுந்தர் (தே.மு.தி.க.):–
61,403
கராத்தே சரவணன் (ச.ம.க.):–
27,013
குடிநீர் பிரச்சினை
தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டது. கடற்கரை கிராமங்கள் அதிகம் உள்ளன. தூத்துக்குடியைச் சுற்றிலும் மின்சார நிலையங்கள், தொழிற்சாலைகள் உருவாகி உள்ளன.
அதே நேரத்தில் வற்றாத தாமிரபரணி பாசனம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இது விவசாயிகளிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதியான ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீரை கொண்டு செல்ல தீட்டப்படும் திட்டங்கள், ஆமை வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும், மாநகராட்சிக்கு உரிய அனைத்து வசதிகளும் முறையாக கிடைக்க வேண்டும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தொழிற்சாலைகள் இயங்குவதுடன், குடிநீர் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பது தூத்துக்குடி மக்களின் கோரிக்கை.
தீப்பெட்டி தொழில்
கோவில்பட்டி பகுதியை பொறுத்தவரை எப்போதும் குடிநீருக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறது. அங்கு தீப்பெட்டி தயாரிப்பு முக்கிய தொழிலாக விளங்குகிறது. தீப்பெட்டி தயாரிப்புக்கு மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்பு.
புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. ஆனாலும் சமீப காலமாக அந்த தொழில் நலிவடைந்து வருகிறது. மக்களின் மேம்பாட்டுக்கு புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும், மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க வேண்டும், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பனை தொழில்
திருச்செந்தூர் ஆன்மிக தலம். உடன்குடி பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் குறைந்துவிட்டதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. கருப்பட்டி உற்பத்திக்கு உடன்குடி பெயர் பெற்றது. ஆனால், பனை தொழில் நலிவடைந்ததால், பனை தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக, தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும், விவசாயத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது.
விளாத்திகுளம் வறண்ட பகுதி ஆகும். வானம் பார்த்த பூமியும் கூட. அங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும், தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு அமைக்கப்படும் ரெயில் பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றும் தகுதியான வேட்பாளரை, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மக்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக