வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கருத்துகணிப்பு /கன்னியாகுமரி

கடந்த 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை குமரி மாவட்டம் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 7 சட்டசபை தொகுதிகளைக் கொண்டிருந்தது. கன்னியாகுமரி சட்டசபை தொகுதி திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியுடனும், மற்ற 6 தொகுதிகளும் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியுடனும் சேர்க்கப்பட்டிருந்தன.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தோற்றுவிக்கப்பட்டது.
நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியாக இருந்து தற்போது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றுள்ள இத்தொகுதி சிறப்பு வாய்ந்த தொகுதியாக விளங்குகிறது.
இங்கு இதுவரை நடந்த தேர்தல்களில் 1951–ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும், 1957, 1962, 1967–ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 1969 (இடைத்தேர்தல்), 1971–ம் ஆண்டுகளில் பழைய காங்கிரஸ் கட்சியும், 1977–ம் ஆண்டு ஜனதா கட்சியும், 1980, 1984, 1989, 1991–ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 1996, 1998–ம் ஆண்டுகளில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும், 1999–ம் ஆண்டு பா.ஜனதா கட்சியும், 2004–ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், 2009–ம் ஆண்டு தி.மு.க.வும் வென்றுள்ளன.
நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியாக இருந்தவரை தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா. கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள்தான் இந்த தொகுதியை கைப்பற்றி உள்ளன.
1971–ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.சி.பாலன் வெற்றிவாய்ப்பை இழந்தார். எனவே இந்த தொகுதி தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகவே, அதிலும் காங்கிரஸ் கட்சிதான் அதிக முறை ஜெயித்த தொகுதியாகவும் இருந்து வந்தது. இதுவரை நடந்த இடைத்தேர்தல் உள்பட 16 தேர்தல்களில் 3 முறை மட்டுமே பா.ஜனதா, கம்யூனிஸ்டு, தி.மு.க. ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
மற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள்தான் ஜெயித்துள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கன்னித்தொகுதியான கன்னியாகுமரி தொகுதி முதல் முறையாக கடந்த 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலை சந்தித்தது.
அதுவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்த தொகுதியை, கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய எம்.பி.யான ஹெலன் டேவிட்சன், மாநில கட்சியின் வசமாக்கிய பெருமையை பெற்றுள்ளார்.
வாக்குகள் விவரம்
கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களில் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–
ஹெலன்டேவிட்சன்(தி.மு.க. வெற்றி)– 3,20,161
பொன்.ராதாகிருஷ்ணன்(பா.ஜனதா)– 2,54,474
பெல்லார்மின் (மார்க்சிஸ்ட் கம்யூ.)– 85,583
ஆஸ்டின் (தே.மு.தி.க.)– 68,472
சிவகாமி (பகுஜன் சமாஜ்)– 6,400
அருள் துமிலன் (லோக் ஜனசக்தி)– 2,812
த.பாலசுப்பிரமணியன் (இந்து மகாசபா)– 1,698
சி.பி.ராதாகிருஷ்ணன் (சுயே)– 525
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்து நாடார்கள், கிறிஸ்தவ நாடார்கள் அதிகமாக வசித்து வரும் இந்த தொகுதியில் பிள்ளை, மீனவர்கள், நாயர், குரூப், காணி, தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகிய இன மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடியவர்களாக நாடார் இன மக்கள் இருந்து வருகிறார்கள். மற்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அரசியலாக இருந்தாலும், இந்த தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மதமாக இருந்து வருகிறது.
கோரிக்கைகள் நிறைவேறவில்லை
இந்த தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக குளச்சல் வர்த்தக துறைமுகம், ரப்பர் தொழிற்சாலை, முந்திரி தொழிற்சாலை, சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விமான நிலையம் போன்றவை அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்து வருகின்றன.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து தற்போதைய எம்.பி. ஹெலன் டேவிட்சன் கூறியதாவது:–
கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் குமரி மாவட்டத்தில் விமான நிலையம், வர்த்தக துறைமுகம், சாய் சப்–சென்டர், ரப்பர் பூங்கா அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆனவுடன் பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், பிரதமரை சந்தித்தும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்ததின் பேரில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் பணியை செயல்படுத்த முடியவில்லை.
இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று 2013–2014 பட்ஜெட்டில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான சர்வே பணிகள் முடிவடைந்து விட்டது. மார்த்தாண்டத்தில் பாராளுமன்ற அலுவலகம் அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். மார்த்தாண்டத்தில் பம்மம் என்ற இடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சாதனை பணிகள்
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கின்ற வகையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கி 2 முறை டெண்டர் அறிவிக்கப்பட்டது. டெண்டர் யாரும் எடுக்காததால் தற்போது மத்திய அரசு நேரடி நிதியினால் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வணிகத்துறை மந்திரி சுதர்சன நாச்சியப்பன், ரப்பர் தொழிற்சாலை அமைப்பதற்காக உடனடியாக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தந்தால் உடனே ரப்பர் பூங்கா அமைத்து தருவேன் என்று உறுதி அளித்த பிறகும் மாவட்ட நிர்வாகம் அதற்கான இடம் இல்லை என்று இடத்தை அளிக்க முன்வராததால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இதுதவிர 6 புதிய ரெயில்களை கொண்டு வந்துள்ளேன். பல்வேறு ரெயில்களை குமரி மாவட்டத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளேன். பல கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகளை கொண்டு வந்துள்ளேன். எனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளேன்.
இவ்வாறு ஹெலன் டேவிட்சன் எம்.பி. கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 10–ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 30 ஆயிரத்து 918 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 438 பேர் ஆண்கள், 7 லட்சத்து 6 ஆயிரத்து 416 பேர் பெண்கள் இதரர் 64 பேர் ஆவர். 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலைவிட நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 463 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
காமராஜர், மார்ஷல் நேசமணி வென்ற தொகுதி
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய காரணமாக இருந்தவர்களில் குமரி தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. தற்போதைய கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி, நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1951, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 பொதுத்தேர்தல்களில் மார்ஷல் நேசமணி வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் 1968–ம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு 1969–ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் பழைய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1971–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் இதே தொகுதியில் காமராஜர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980–ம் ஆண்டு முதல் 1998–ம் ஆண்டு வரை நடந்த 6 பொதுத்தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்ட டென்னிஸ் 4 முறை காங்கிரஸ் சார்பிலும், 2 முறை த.மா.கா. சார்பிலும் ஆக மொத்தம் 6 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெறுகிறார். இதே தொகுதியில் 1977–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான குமரி அனந்தன், ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக