ஞாயிறு, 23 மார்ச், 2014


உண்மைதான்; அ.தி.மு.க. ஒரு தனி “டீம்” தான்; கலைஞர் 
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா; அ.தி.மு.க.வை தனி “டீம்” என்றும், முதன் மையான “டீம்” என்றும், தமிழ்
மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் “டீம்” என்றும், தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் “டீம்”என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?

பதில் :- உண்மைதான்; அ.தி.மு.க. ஒரு தனி “டீம்” தான்; அந்த “டீம்” வேறு யாரையும் மதிக்காத “டீம்” – தோழமைக் கட்சிகள் என்று யாரையும் சேர்க்காத “டீம்”- கூட்டணிக் கட்சிகள் என்று யாராவது இருந்தாலுங்கூட, கடைசி வரை அவர்களை நம்ப வைத்து கழுத் தறுக்கும் “டீம்” – தமிழ் மொழிக்குச் செம் மொழித் தகுதியா என்று கேட்டு, செம்மொழிப் பூங்காவையே சீரழித்து வருகின்ற “டீம்” – தமிழர்களின் நல்வாழ்வுக்காக நடைபெறும் திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தும் “டீம்” – இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

கேள்வி :- தி.மு. கழகத்திற்கு ஒரே கொள் கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது என்று ஜெயலலிதா திருவாய் மலர்ந்திருக் கிறாரே?
பதில் :- ஜெயலலிதா எவ்வாறு ஒரே கொள்கையோடும், கோட்பாட்டோடும் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகிறேன். 2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், “சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமள வுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை முக்கி யத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்க ளுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக் குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்’’ என்று சொன்னார்கள். அது மாத்திரமல்ல; 10.5.2004 அன்று வெளியிடப்பட்ட அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள்

தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்’’ என்று சொன்னார்கள். தற்போது வெளியிட்டுள்ள அ.தி.மு.க. அறிக்கையிலே இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பு என்ன ஆயிற்று? அப்போது சிறப்பான திட்டம் என்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அந்தத் திட்டமே வேண்டாமென்று உச்சநீதிமன்றத்திலேயே வழக்குத் தொடுத்திருக்கிறார் ஜெயலலிதா! அன்று செழிக்க வைக்கும் திட்டமாக இருந்த சேதுத் திட்டம், இன்று செல்லாக் காசுத் திட்டமாக மாறிவிட்டதா? இதுதான் ஒரே கொள்கை, ஒரே கோட்பாட்டிற்கான அடையாளமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக