ஞாயிறு, 23 மார்ச், 2014

கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி என்றால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஏன்? அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது ஏன்? என தமிழக முதல்வரும்,
அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவனை ஆதரித்து அவர் பேசியது:
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும், பெட்ரோல், டீசல் விலைநிர்ணயக் கொள்கையும்தான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அப்போது, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது.
அனைத்துப் பொருள்களும் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் தான் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன. எனவே பெட்ரோலியப் பொருள்களின் விலை மாதாமாதம் உயர்ந்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரத்தான் செய்யும். ரயில் சரக்குக் கட்டணங்களையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தியது. அப்போதும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையாக திமுக: மக்களை வதைக்கின்ற பிரச்னை விலைவாசி உயர்வு. இந்த விலைவாசி உயர்வுக்கு முழுக்காரணம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், திமுகவும்தான். விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளுக்கு எல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டிவிட்டு, விலைவாசிஉயர்வு குறித்து தமிழக அரசை குற்றம் சாட்டி அறிக்கை விடுத்திருக்கிறார் கருணாநிதி.
மீண்டும் மத்திய ஆட்சியில் இடம்பிடிக்க ஆசை: இப்போது மீண்டும் மத்திய ஆட்சியில் இடம் பிடித்து, வளம்கொழிக்கும் இலாக்காக்களை பெற வேண்டும் என்ற பேராசையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றி அமைக்க திமுக பாடுபடும் என்ற பொருளை தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்திருக்கிறார் கருணாநிதி.
இந்தக் கொள்கை தவறு என்பதால் தானே மாற்ற வேண்டும் என்கிறது திமுக. இந்த தவறை மத்திய அரசு செய்த போதே, அதை திமுக ஏன் தடுக்கவில்லை.
அதிமுக தேர்தல் அறிக்கையில் விலைவாசி கட்டுப்பாடு: அதிமுக தேர்தல் அறிக்கையில் விலைவாசிக் கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றும், விலைவாசிக் கட்டுப்பாடு குறித்து அந்த அளவுக்கு அதிமுகவுக்கு அக்கறை இல்லை என்றும் கருணாநிதி கூறி இருக்கிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் பொருள் 19-ல் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு விலை நிர்ணயக்கொள்கை என்ற தலைப்பின் கீழும், பொருள் 30-ல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை என்ற தலைப்பின் கீழும், பொருள் 34-ல் விரிவான பொருளாதாரக்கொள்கை மற்றும் நிதிக் கொள்கை என்ற தலைப்பின் கீழும் விலைவாசி கட்டுப்பாடு குறித்தும், அதற்காக என்னென்ன கொள்கை மாற்றங்கள் செய்யப்படும் என்பது குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உர விலை உயர்வுக்கு திமுகவே காரணம்: மத்திய அரசின் தவறான கொள்கைகளால் சாகுபடி செலவு உயர்ந்துள்ளது. அனைத்து இடுபொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மத்திய அரசின் புதிய உரக் கொள்கை. இந்த உரக் கொள்கையை வகுத்ததே திமுகதான். இதன் காரணமாக துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில் உரங்களின் மீதான 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியினை 12.7.2011 முதல் முழுமையாக நான் ரத்து செய்தேன்.
கரசேவைக்கு அதிமுக யாரையும் அனுப்பவில்லை: சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் கரசேவைக்கு அதிமுக ஆட்களை அனுப்பியது என்ற குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சுமத்துகிறார் கருணாநிதி. அவரது கூற்றில் எள்ளளவும் உண்மை இல்லை.
கருணாநிதிக்கு கேள்வி: கரசேவையை ஆதரித்தது பாஜக. கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது பாஜக. அந்தக் கட்சியுடன்தானே கருணாநிதி கூட்டு வைத்துக்கொண்டார்.
1999 முதல் 2003 முடிய பாஜக தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, வளமான இலாகாக்களை திமுக தானே பெற்றுக் கொண்டது? கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி என்றால் ஏன் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார்? அந்தக் கூட்டணி ஆட்சியில் ஏன் பங்கேற்றார்? அந்த அமைச்சரவையில் தானே பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராக முரசொலிமாறன் இருந்தார். எனவே இதைப் பற்றி பேச கருணாநிதிக்கு தகுதியில்லை.
முதலீடுகள் குறைவு: மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுவிட்டது. அதன் சுமை ஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து, நாடு மீளவேண்டும் என்றால் நமக்கு உள்ள ஒரே வாய்ப்பு வரும் மக்களவை தேர்தல்தான்.
இந்த தேர்தலில் மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் ஆட்சியை, தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய ஆட்சியை, மத்திய அரசின் கொள்கைகளை நாம் தீர்மானிக்கும் ஆட்சியை மலரச்செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறும் காலம் கனிந்து விட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.
கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.சி.சம்பத், வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், எம்எல்ஏக்கள் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் நகரச் செயலர் ஆர்.குமரன், எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ. தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடலூரில் தொடங்கிய அரசியல் பிரவேசம்...

32 ஆண்டுகளுக்கு முன்பு 1982ஆம் ஆண்டில் எனது அரசியல் வாழ்க்கை கடலூரில்தான் தொடங்கியது. 1982-ல் முதன் முதலாக, எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவில் உறுப்பினராக இணைந்தேன். கழகத்தில் இணைந்த சில நாள்களில் கடலூரில் அதிமுக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெண்ணின் பெருமை குறித்து பேச எம்ஜிஆர் என்னை அழைத்தார். அதே கடலூரில் 32 ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக