ஞாயிறு, 23 மார்ச், 2014

தேர்தல் செய்திகள் 
பொள்ளாச்சி அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் பிரசாரத்துக்குத் தயாராகும் காட்சிதான் இது. கட்சியின் துண்டு அணிவித்து, அது கீழே விழுந்துவிடாமல் இருக்க அவரது அடிபொடிகள் 'பின்’ குத்திவிட..
. பின் நிதானமாக டச்-அப் செய்துகொண்டு பளிச் என ஓட்டு சேகரிக்க புறப்படுகிறார்.

பௌர்ணமி சென்டிமென்ட்!
கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன்தான் பி.ஜே.பி-யின் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு முன்பாகவே, அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கிவிட்டனர் மகளிர் அணியினர். ஏழாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் இறங்கும் அவர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பௌர்ணமி தினத்தில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த பௌர்ணமி சென்டிமென்ட் வெற்றி அடையுமா?
- காளிராஜ்
செந்தில் செம்மொழி 'ஆராய்ச்சி’ நிறுவனம்?
என்னதான் காசு கொடுத்தாலும் சினிமா புகழ் பேச்சாளர்களை ஒரேயடியாக வேலை வாங்கலாமா? அவர்களும் மனுஷங்கதானே! பாவம் நடிகர் செந்தில், பிரசாரம் செய்ய கிளம்பினாலும் கிளம்பினார்... ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசவிட்டு ஒருவழி ஆக்கிவிட்டனர் மதுரை அ.தி.மு.க-வினர்!
கடந்த 18-ம் தேதி மதுரை மாவட்டத்தில் பல இடங் களிலும் வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு தொண்டை கட்டிவிட்டது... ஆனாலும் இரவு பைகாராவில் நடந்த பொதுக்கூட்டத்துக்கும் கூட்டிவந்துவிட்டனர். உள்ளூர் கோடங்கிகள் முதல், அமைச்சர் செல்லூர் ராஜு வரை பேசித்தள்ள, ஏற்கெனவே ரொம்ப டயர்டாக இருந்த செந்திலால் இருக்கையில் உட்கார முடியவில்லை. விட்டால் அங்கேயே துண்டை விரித்துப் படுத்துவிடுவார்போல... அந்தளவுக்கு அலுப்பு அவர் முகத்தில் தெரிந்தது. ஆனால், இதை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கடைசியாகத்தான் அவரைப் பேச விட்டார்கள்.
அவர் பேசியது காக்கா பிரியாணி சாப்பிட்டவரின் குரல்போல அப்படி கரகரவென இருந்தது. அந்த கரகர குரலில் அவர் பேசியதில் குறிப்பிட வேண்டியது, அழகிரியை 'கொலைகிரி’ என்று குறிப்பிட்டது மட்டும்தான். அடுத்து, செம்மொழி பற்றிய அவருடைய ஆராய்ச்சி அதிர்ச்சியானது. ''தமிழை செம்மொழியாக்கிட்டேன், செம்மொழியாகிட்டேன்னு கருணாநிதி சொல்றாரே... இதுல என்ன அதிசயம் இருக்கு?! நாம இங்க தமிழைப் பேசுனா அது செம்மொழி. ஆந்திராவுல தெலுங்கு பேசுறவங்களுக்கு, அது செம்மொழி. கர்நாடகாவுல, கன்னடம் பேசுறவங்களுக்கு அது செம்மொழி. இவ்வளவுதானே! இதைச் சொல்லி ஏமாத்தலாமா?'' என்றாரே பார்க்கலாம். மேடையில் இருந்தவர்களே ஆடிப் போய்விட்டனர். அய்யா, செந்திலுக்கு ரெஸ்ட் கொடுங்கய்யா!
- செ.சல்மான்
திருப்பூரில் ஜெயலலிதா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்துக்கு முந்தைய காட்சி இது. ஜெயலலிதா பேசுவதற்காக பிரத்யேக மைக் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் உயரத்தை அளவுகோலாக கணக்கிட்டு, ஸ்கேல் வைத்து அளக்கிறார்கள்.
இது குட்டி டீ!
நமோ டீக்கடையின் பாதிப்போ என்னவோ... மு.க.ஸ்டாலினும் டீக்கடை பிரசாரத்தில் குதித்துவிட்டார். திருச்செந்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது சோனக்கண்விளை என்ற ஊரில் பிரசார வாகனத்தை நிறுத்தி ஸ்டாலின் டீ குடித்ததுதான் லேட்டஸ்ட் பரபர! இதோ... அந்த டீக்கடையின் உரிமையாளரான ராஜவேல் நடந்ததைச் சொல்கிறார். ''ஸ்டாலினோட பிரசார வாகனம் வந்துகிட்டு இருந்தப்ப கடையில டீ குடிச்சுகிட்டு இருந்த முத்துக்குட்டிங்கிறவர், அவரோட வேனைப் பார்த்து கை காட்டினார். உடனே வேனை ஓரமா நிறுத்தச் சொன்ன ஸ்டாலின் டீக்கடைக்குள்ள நுழைஞ்சார். கூடவே வேட்பாளர் ஜெகனும், மா.செ. பெரியசாமியும் நுழைஞ்சாங்க. 'டீ இருக்கா’ன்னு கேட்ட ஸ்டாலின், பருப்பு வடையையும் கேட்டு சாப்பிட்டார்'' என்று சிலாகித்தார்.
- சரவணபெருமாள்
அதிர்ச்சியில் அரசர்!
இந்தத் தேர்தலில் தனியே தன்னந்தனியே தமிழகத்தில் களம் காண்கிறது காங்கிரஸ். கட்சியின் தேசியச் செயலாளரான திருநாவுக்கரசர், ராமநாதபுரம் தொகுதியைக் குறிவைத்து இருக்கிறார். அங்கே, அழகிரியின் ஆதரவாளரான தி.மு.க. சிட்டிங் எம்.பி. ரித்தீஷ§க்கு சீட் கொடுக்காததால், அவருடைய ஆதரவாளர்கள் ஓட்டுக்களை வளைக்க அரசர் பிளான் செய்துள்ளாராம். அதற்காக அழகிரியைச் சந்தித்து அவர் பேச... 'பார்க்கலாம்’ என்று பிடிகொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டாராம். ஓரளவுக்கு நம்பிக்கையுடன் அரசர் இருந்த நிலையில், 'மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டும்’ என்று அழகிரி ஸ்டேன்ட்மென்ட் விடுக்க... அதிர்ந்துகிடக்கிறார் அறந்தாங்கியார்.          
- செ.சல்மான்



அன்பழகனின் பாராமுகம்!
திருச்சி சிவா... தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு செயலாளர். நல்ல பேச்சாளர். ஆனால், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாவட்டச் செயலாளர் நேருவின் எதிர் கோஷ்டியில் சிவா இருக்கிறார். இப்போது திருச்சி எம்.பி. தொகுதி வேட்பாளராக நிற்கும் அன்பழகனோ, நேரு கோஷ்டி. எனவே, இதுநாள் வரை சிவா உள்ளிட்ட எதிர் கோஷ்டியினர் சிலரை வேட்பாளர் பார்க்கவும் இல்லையாம்; பிரசாரத்துக்கு அழைக்கவும் இல்லையாம். பொறுத்துப் பொறுத்துப்பார்த்த திருச்சி சிவா, அவரை அன்போடு அழைத்த மற்ற தொகுதி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய கிளம்பிவிட்டார்.  
- கனிஷ்கா
இலை குடை..!
எம்.ஜி.ஆர். சமாதியில் ஆரம்பித்த அ.தி.மு.க-வினரின் இரட்டை இலை மோகம், மினி பஸ், குடிநீர் கேன் என விஸ்வரூபம் எடுத்தது. அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நத்தம் - மதுரை சாலையில் பரளி என்ற இடத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை பறக்கும் குதிரை, இரட்டை இலை என அ.தி.மு.க. குடையாக மாற்றியிருந்தார். 'தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பின்பும் அந்த நிழற்குடையில் உள்ள இரட்டை இலையை மறைக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என தி.மு.க-வினர் புகார் வாசிக்கிறார்கள். மக்கள் பணத்தில் கட்டும் கட்டடங்களில், தங்கள் கட்சியின் விளம்பரங்கள் செய்துகொள்வதை இந்த அரசியல்வாதிகள் எப்போதுதான் மாற்றுவார்களோ!
- ஆர்.குமரேசன்
உதித்தது புதிய காங்கிரஸ்
மதுரையில்  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பெரியசாமி என்பவர் சுடச்சுட 'தமிழக கக்கன் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஒரிஜினல் காங்கிரஸே அதன் மகத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் சூழ்நிலையில், புதுசா ஒரு காங்கிரஸ் உருவாவதற்கு என்ன அவசியம் என்று, அதன் நிறுவனர் பெரியசாமியிடம் கேட்டோம். ''தமிழர் விஷயத்தில் பல்லாண்டு காலமாக துரோகம் செய்துவருகிறது காங்கிரஸ், ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. டெல்லித் தலைமை இப்போ மாறிடும், அப்போ மாறிடும்னு நானும் பல வருடங்களா காத்திருந்தேன். அது வீணாக போய்விட்டது. அதனால்தான் எளிமையின் உருவமான கக்கன் பெயரில் கட்சி தொடங்கிவிட்டேன்'' என்றார். இவருடைய கட்சி போஸ்டரில் காந்தி, காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர்., பிரபாகரன் என பலரது படங்களும் இருந்தது வித்தியாசம்.
- செ.சல்மான்
முருகனுக்கு தூதுவிட்ட தாமரை!
பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. ரொம்பவே முறுக்கிக்கொண்டு இருப்பதால், ராமதாஸுக்கு அடுத்தபடியாக வட மாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பி.ஜே.பி. சார்பில் தூதுவிட்டார்களாம். 'அ.தி.மு.க-வில்தான் உங்களுக்கு சீட் தரவில்லையே... தாமரை அணிக்கு வாருங்கள். நான்கு எம்.பி. சீட்கள் தருகிறோம்’ என்று அழைத்தார்களாம்.  'அ.தி.மு.க-வுக்கு ஆதரவு என்று சொல்லிவிட்டு தேர்தல் பிரசாரம் செய்துவருகிறோம். 40 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய டூர் புரோகிராம் தயார்செய்துவிட்டேன். எனவே, இனி பி.ஜே.பி. கூட்டணிக்கு வர முடியாது'' என்று நோ சொல்லிவிட்டாராம்.
- முகின்
வேஷ்டியா... தொப்பியா?
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சியினரும் மீறாமல் பின்பற்ற வேண்டும் என மார்த்தாண்டத்தில் காவல் துறை அதிகாரிகள் அனைத்து கட்சியினருக்கும் வலியுறுத்தினர். அப்போது, 'ஆம் ஆத்மி கட்சியினர் அவர்களின் கட்சிப் பெயரையும் துடைப்பம் சின்னத்தையும் வைத்த தொப்பி அணிவதை மாத்திக்கணும்’ என்று பிற கட்சியினர் சொல்ல... கொந்தளித்த ஆம் ஆத்மி கட்சியினர், 'எங்களைத் தொப்பி அணியக் கூடாதுன்னு சொல்ற கட்சிகாரர்கள் அவங்க கட்சி கரை வேஷ்டியைக் கட்டுறதை மாத்தணும். அப்ப நாங்களும் தொப்பி அணியும் பழக்கத்தை மாத்திக்கிறோம்’  என்று சொல்ல... 'வேஷ்டியா... தொப்பியா?’ என்று பட்டிமன்றமே நடந்தது. இறுதியில் எந்தத் தீர்ப்பும் கொடுக்கப்படாமலே கூட்டம் முடிந்தது.
- ச.காளிராஜ்
ஓடிவந்த வனரோஜா!
திருவண்ணாமலையில் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டம் செங்கம் செல்லும் சாலையில் அம்மாபாளையம் கிராமத்தில் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்துக்காக ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் பேருந்துகள், மினி வேன்கள் மூலம் மக்களை அழைத்து வந்திருந்தனர். பொதுக்கூட்டத்துக்கு கலந்துகொள்ள வந்த வேட்பாளர் வனரோஜாவை அடையாளம் தெரியாமல் போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தினர். 'நான்தான் வேட்பாளர்’ என்று படாதபாடுபட்டு எடுத்துச் சொல்லி மேடைக்கு வருவதற்குள் ஜெயலலிதா பேசத் தொடங்கிவிட்டார். ஓட்டமும் நடையுமாக ஓடிவந்தே மேடையேறினார் வனரோஜா.
- காசி.வேம்பையன்
தட்சணை எவ்வளவு?
அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள சினிமா பிரபலங்களுக்கு நான்கு பிரிவுகளாகப் பிரித்து அமைச்சர் ஒருவர் மூலமாக பணப்பட்டுவாடா நடந்ததாம். நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஐந்து லட்சமாம். ஏ குருப்புக்கு மூன்று லட்சம், பி குருப்புக்கு இரண்டு லட்சம், சி குருப்புக்கு ஒரு லட்சம் என்று பணம் கொடுத்தார்களாம். இதுதவிர, கூட்டங்களில் கலந்துகொள்ளப் போகும்போது சம்பந்தப்பட்ட பகுதி பொறுப்பாளர்கள் தரும் தட்சணை தனி.
- முகின்
கூச்சப்படாம சொல்றாங்கப்பா..!
வயசுப் பருவத்தில் காதல் வருவதுபோல, ஒரு சிலருக்கு தேர்தல் வந்துவிட்டாலே கட்சி தொடங்கும் ஆசை வந்துவிடுகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் புற்றீசல்போல புதுப்புது கட்சிகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. அதில் ஒன்று தான், 'அகில பாரத காமராஜ் காங்கிரஸ்’. கட்சியின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான சுரேஷ்குமார் பேசுகையில், ''எங்க கட்சி காலத்தின் கட்டாயத்தால் தொடங்கப்பட்டு இருக்கு. நாங்க கட்சி ஆரம்பித்ததும், பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் சிறிய கட்சியினரும் அமைப்புகளும் எங்களோடு கூட்டணி அமைக்க ஆர்வத்தோடு பேசுறாங்க. நாங்க அவர்களோடு கூட்டணி அமைச்சு நாடு முழுவதும் 530 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறோம் (மீதி தொகுதி என்னாச்சு அண்ணாச்சி!). இதில் 240 தொகுதிகளில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும். தமிழகத்தில் எங்க கட்சி சார்பாகப் போட்டியிட நிறைய பேர் ஆர்வமாக இருக்காங்க. அவர்களில் தகுதியானவர்களை(?!) மட்டும் தேர்வுசெய்துள்ளோம். முதல்கட்டமாக ஒன்பது வேட்பாளர்களை அறிவித்து உள்ளோம்'' என சீரியசாகப் பேசிக்கொண்டே சென்றார்.
கலி முத்திப் போச்சு... வேறு என்னத்தச் சொல்ல?
- ஆண்டனி
அடிதடியில் உடன்பிறப்புகள்... அதிர்ச்சியில் ஸ்டாலின்!
நெல்லை தொகுதியை மாவட்டச் செயலாளரான கருப்பசாமி பாண்டியன் தரப்பும்  ஆவுடையப்பன் தரப்பும் கேட்டு அடம்பிடித்த நிலையில், தொழிலதிபரான தேவதாச சுந்தரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை தொகுதியில் ஸ்டாலின்  பிரசாரம் செய்தபோது,  சேரன்மகாதேவியில் அவருக்கு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஆவுடையப்பனின் மகன் பிரபாகரன் ஒரு காரில் சென்றார். ஆவுடையப்பனின் உதவியாளரான வெங்கடேஷ் மற்றொரு காரில் சென்றார். அப்போது இவர்களின் காருக்கு முன்பாக கருப்பசாமி பாண்டியனின் மகன் வி.கே.பி.சங்கர் ஒரு காரிலும் அவரது உறவினரான கருப்பசாமி மற்றொரு காரிலும் சென்றனர். சீக்கிரமாக சென்று வரவேற்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்ய வேண்டும் என்கிற முனைப்பில் பிரபாகரன் வேகமாகச் செல்ல... முன்னால் சென்றுகொண்டிருந்தவர்கள் அவருடைய காருக்கு வழிவிடாமல் நடுரோட்டில் சென்றார்களாம். ஒருவழியாக அவர்களை முட்டுவதுபோலச் சென்று முந்திவிட்டார் பிரபாகரன்.
சேரன்மகாதேவி சென்றதும் பின்னால் வந்த வி.கே.பி.சங்கரின் ஆட்கள், பிரபாகரின் கார் டிரைவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதைக் கவனித்த உள்ளூர் ஆட்கள் வி.கே.பி.சங்கரின் கார் டிரைவரையும் அவரது உறவினர் கருப்பசாமியின் டிரைவரையும் அடித்து உதைத்து சட்டையைக் கிழித்து விரட்டி இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட ஸ்டாலின் படு அப்செட் ஆகிவிட்டாராம். மாலையில் பிரபாகரனுக்கு போன் போட்ட வி.கே.பி.சங்கர், 'ஏதோ தெரியாமல் இந்தச் சம்பவம் நடந்துவிட்டது. இதை மறந்துடுங்க... இனி இப்படி நடக்காது’ என சமாதானம் பேசினாராம். இந்த சமாதானம் தொடருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக