ஞாயிறு, 23 மார்ச், 2014


4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உள்பட முக்கியத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜோத்பூரில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூன்று பேர் தங்கியிருந்த பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்த இடங்கள், முக்கியத் தலைவர்கள் வந்து செல்லும் பாதைகள், கட்சி அலுவலகங்களின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அவர்களிடம் ரகசிய இடத்தில் தனிப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வகாஸ் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டாலும், அந்த இயக்கத்தின் மூளையாகச் செயல்படும் தெஹ்சீன் அக்தர் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணியில் தில்லி போலீஸýம் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் (என்ஐஏ) தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்தவரான வகாஸ், ஹைதராபாத், புணே, மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த பயங்கரவாதச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்.
உளவுத் துறை தகவல்: இது குறித்து தில்லி போலீஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆதரவுடன் செயல்படும் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ், இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடவுள்ளதாக உளவுத் துறை மூலம் தில்லி போலீஸýக்குத் தகவல் கிடைத்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட யாசின் பட்கல், அசதுல்லா அக்தர், அகமது சித்திபாப்பா ஜரார் ஆகிய பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையின்போதும் வகாஸ் தொடர்பான சில தகவல்கள் போலீஸýக்கு கிடைத்தன.
ஜெய்ப்பூர், ஜோத்பூரில் முகாம்: இந் நிலையில், சனிக்கிழமை மாலையில் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் ரயில் நிலையத்துக்கு வகாஸ் வருவதாகத் தகவல் கிடைத்தது. அப்போது, ரயில் நிலையம் வந்திறங்கிய அவரைத் தனிப் படையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அப்போது, ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் உள்ளூர் ஆதரவாளர்களை சந்திக்க வந்ததை வகாஸ் ஒப்புக் கொண்டார். மேலும், மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் முக்கிய அரசியல் தலைவர்களைக் குறி வைத்தும் தேர்தலை சீர்குலைக்கும் வகையிலும் ஆதரவாளர்கள் மூவரும் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.
24 மணி நேரத்தில் கைது: வகாஸ் தெரிவித்த தகவலின்படி, ஜெய்ப்பூரில் வசித்துவந்த முகம்மது மஹ்ரூப் (21) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜோத்பூரில் வசித்து வந்த முகம்மது வகர் அசார் (21), ஷாகிப் அன்சாரி காலித் (25) ஆகிய இருவரும் உள்ளூர் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வசித்த இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஏராளமான பயங்கர வெடி மருந்துகள், ஜெலட்டின் குச்சிகள், "ரிமோட்' மூலம் வெடிகுண்டுகளை இயக்கும் கருவிகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, நால்வரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தில்லி கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை முறைப்படி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்றார் சஞ்சீவ் குமார் யாதவ்.
யார் இந்த வகாஸ்?
தில்லி போலீஸ் கைது செய்துள்ள ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள முஸ்தஃபாபாதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறு வயது முதல் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட மூளைச் சலவை செய்யப்பட்டவர்.
ஃபைஸலாபாதில் உணவு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும்போது, "ஜிகாத்' தொடர்பாக பயங்கரவாதி மௌலானா மசூத் அசார் ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் 2009-இல் சேர்ந்தார். ஆயுதங்கள் கையாளுதல், வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி முடித்த அவர், 2010-இல் கராச்சி, பிகார் வழியாக இந்தியாவுக்கு வந்தார்.
அப்போது தில்லி ஜாமா மசூதியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வந்த யாசின் பட்கலை (கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்) சந்தித்துப் பயிற்சி அளித்தார்.
இந்த யாசின் பட்கல் குழுதான் 2010, செப்டம்பர் 19-ஆம் தேதி தில்லி ஜாமா மசூதி அருகே பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு பிகார் திரும்பிய வகாஸ், அதே ஆண்டு டிசம்பரில் வாராணசியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினார். பின்னர் மும்பை தப்பிச் சென்ற அவர், 2011, ஜூனில் ஒபரா ஹவுஸ், ஜாவேரி பஜார் ஆகிய இடங்களில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினார். 2012, ஆகஸ்ட் 1-இல் அசதுல்லா அக்தருடன் சேர்ந்து புணேயில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினார். பிறகு மங்களூரில் பதுங்கியிருந்தார். அசதுல்லா அக்தர், தெஹ்சீன் அக்தர் ஆகியோருடன் சேர்ந்து 2013, பிப்ரவரி 21-ஆம் தேதி ஹைராபாதில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இந்த நேரத்தில்தான் யாசின் பட்கலும் அசதுல்லா அக்தரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கேரள மாநிலம், மூணாறிலும் பின்னர் ஒடிசா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருந்தார். கடைசியாக ராஜஸ்தானில் தாக்குதல் நடத்தும் சதியைச் செயல்படுத்தும் நோக்குடன் அஜ்மீர் வந்தபோது போலீஸிடம் வகாஸ் சிக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக