ஞாயிறு, 23 மார்ச், 2014

கையை மட்டும் அசைத்துவிட்டு பேசாமல் சென்ற மு.க.ஸ்டாலின்!


சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை
ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு, பிரச்சாத்தின் கடைசி நிகழ்வாக குன்னத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குன்னம் வருவதற்கு இரவு 10 மணி ஆகிவிட்ட காரணத்தினால் பொதுக்கூட்டத்தில் பேசாமல், மேடை ஏறி தொண்டர்களுக்கு கையை மட்டும் அசைத்தார். கட்சியினர் அவருக்கு மாலை அணிவித்து, செங்கோல் பரிசு வழங்கினர்.

இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது, பிரச்சாரத்தின்போது வழியெங்கும் மக்கள் அலைஅலையாய் குவிந்திருந்தனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை அவர் சந்தித்து வந்தார். மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் பேச ஆரம்பிக்கும்போதே, மக்கள் தலையா இல்ல கடலலையா. இந்த கூட்டத்தை பார்க்கும்போது உங்களையே பார்த்துக்கொண்டிருக்கலாம் போலிருக்கிறது என்றார். ஆக எங்களுக்கு முழு நம்பிக்கை வந்துள்ளது. 40க்கு 40 என பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை கலைஞரின் கரங்களில் ஒப்படைப்போம். இவ்வாறு கூறினார். 

கூட்டத்திற்கு வந்த திமுகவினர் கூறியதாவது, எங்கள் தளபதி மு.க.ஸ்டாலினின் நிலைமை எங்களுக்கு புரிகிறது. தேர்தல் விதிமுறையை மீறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசவில்லை. மற்ற தொகுதிகளில் அவர் பேசுவதை நாங்கள் டிவியில் பார்ப்போம். இருப்பினும் எங்கள் தொகுதியில் அவரது பேச்சை கேட்டு, கைதட்டி, விசில் அடிக்காமல் ஊருக்கு திரும்புவது வருத்தம் அளிக்கிறது என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக